சாதனா கேசவன் (North view primary school)
"பெற்றோரின் கடின உழைப்பை மதிக்க வேண்டும்!"
ஒரு நாள் பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த ராமு, தனது நண்பன் புதிய கைபேசியை பயன்படுத்துவதைப் பார்த்தான். அந்த கைபேசி மிகவும் அழகாகவும், நவீன வசதிகளுடனும் இருந்தது. என் அப்பா நேற்று இதை வாங்கி கொடுத்தார் என்று நண்பன் பெருமையுடன் கூறினான். அதைப் பார்த்த ராமுவிற்கு அதே போன்ற கைபேசி வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. நண்பர்களும் அந்த கைபேசியைப் பாராட்டியதால் ராமுவின் ஆசை மேலும் அதிகரித்தது. வீட்டிற்கு வந்தவுடன், அப்பா ..எனக்கும் ஒரு புதிய கைபேசி வாங்கித் தாருங்கள் என்று ராமு கேட்டான். ஆனால் அப்பா, “ராமு தற்போது குடும்ப செலவுகள் அதிகமாக உள்ளன. அதனால் இப்போது வாங்க முடியாது”என்று கூறினார். அம்மாவும் அப்பாவின் கருத்தை ஆதரித்தார். இதைக்கேட்ட ராமு மிகவும் வருத்தம் அடைந்தான். பெற்றோர் தன் ஆசையை நிறைவேற்ற விரும்பவில்லை என்று எண்ணி கோபத்துடன் தனது அறைக்குச் சென்றான். அன்று இரவு ராமுவால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. ஏன் பெற்றோர் தனது வேண்டுகோளை மறுத்தார்கள் என்று யோசித்துக் கொண்டே இருந்தான். மனம் முழுவதும் கவலையுடன் இருந்த அவன் பலவிதமாக சிந்தித்தான்.
அப்போது அவனுடைய அம்மா அறைக்குள் வந்து அவன் அருகில் அமர்ந்து, ஏன் சோகமாக இருக்கிறாய்? என்று கேட்டார். ராமு தனது வருத்தத்தை அம்மாவிடம் வெளிப்படுத்தினான். அம்மா அமைதியாக, ராமு.. உன் அப்பா குடும்பத்திற்காக தினமும் கடினமாக உழைக்கிறார். மேலும் பகுதி நேர வேலை வேறு பார்க்கிறார். கல்விச் செலவுகள் வீட்டு செலவுகள் மற்றும் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அவர் பல தியாகங்களைச் செய்கிறார். சில நேரங்களில் தன்னுடைய தேவைகளைக் கூட ஒதுக்கி வைத்து குடும்பத்திற்காக உழைக்கிறார். அதனால் தான் இப்போது கைப்பேசி வாங்க முடியவில்லை என்று அம்மா பொறுமையாக விளக்கினார். அம்மாவின் வார்த்தைகளைக் கேட்ட ராமு, தனது அப்பாவிடம் சென்று அப்பா என்னை மன்னித்து விடுங்கள். உங்களுடைய கஷ்டத்தைப் புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டேன் என்று கூறினான். அதைக் கேட்டு அப்பா மகிழ்ச்சி அடைந்தார். “ராமு, நீ நன்றாக படித்து உழைத்தால் எதிர்காலத்தில் உன் விருப்பங்களை நீயே நிறைவேற்றிக் கொள்ளலாம்” என்று அறிவுரை கூறினார். அன்றிலிருந்து ராமு பெற்றோரின் உழைப்பையும் தியாகத்தையும் மதிக்கக் கற்றுக் கொண்டான். படிப்பில் அதிக கவனம் செலுத்தி நல்ல மாணவனாக மாறினான். பெற்றோரின் கடின உழைப்பை மதிக்க வேண்டும் என்பதே இந்த கருவின் நீதி.
கருத்துகள்
முதல் கருத்தை நீங்கள் பதியுங்கள்!