ஜஷ்வந்த் ஆரவ் (West Grove primary school)
" “கைபேசியை விட தன் பெற்றோரே தன் மகிழ்ச்சி!”"
கிரீங்…! கிரீங் …!என்று பள்ளி மணி ஒலித்தது. அனைவரும் கூண்டிலிருந்து விடுபட்ட குருவிகள் போல வெளியே சிட்டாய் பறந்தனர். அதில் ரவி என்ற ஒரு மாணவன் தன் புதிய கைபேசியை எல்லோரிடமும் பெருமையாகக் காட்டி அதில் விளையாட்டுக்கள் விளையாடி, புகைப்படங்கள் எடுத்து மகிழ்ச்சியாக இருந்தான். அதைப் பார்த்த ராமுவுக்கும் அதன் மீது ஆசை வந்துவிட்டது.
அவன் அசுர வேகத்தில் தன் வீட்டை நோக்கி ஓடினான். சிறிது நேரத்தில் வீட்டை அடைந்த ராமு உடனடியாக தன் பெற்றோரிடம் சென்று, அம்மா ..அப்பா ..என் பள்ளியில் பயிலும் மாணவனாகிய ரவியிடம் ஒரு புதிய கைபேசி இருக்கிறது. அதில் விளையாட்டுக்கள் விளையாடலாம். புகைப்படங்கள் எடுக்கலாம், மேலும் பிற ஆடம்பரமான அம்சங்கள் இருக்கின்றன. எனக்கும் அப்படிப்பட்ட ஒரு கைபேசி வேண்டும் என்று பிடிவாதமாக பெற்றோரிடம் கேட்டான். உடனே ராமுவின் தாயாரின் உடலும் உள்ளமும் கொதித்தன. அவரின் முகம் “கோவைப் பழம் போல் சிவந்தது”. அவர் கண்களால் சுட்டெரிப்பது போல் ராமுவைப் பார்த்து முறைத்தவாறு , “இல்லை … முடியாது “என்று கடுமையாக கூறினார். ராமு ஏமாற்றக் கடலில் மூழ்கினான். கண்ணீர் அருவியெனப் பெருகி ஆறாக ஓடியது. இதைப் பார்த்த ராமுவின் தந்தை ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போல் காட்சி அளித்தார்.
அன்று இரவு அப்பா வீட்டிற்கு வரவில்லை. ராமுவுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. அவன் இதயம் “படபடக்” என்று தாளம் போட்டது. அவனால் சும்மா இருக்க முடியவில்லை. அவன் உடனடியாக தாயாரிடம் விரைந்தான். “அம்மா ..ஏன் அப்பா இன்னும் வீடு திரும்பவில்லை?” என்று வினவினான். “நீ மாலையில் ஒரு கைபேசியை கேட்டாய் அல்லவா?அது மிகவும் விலை உயர்ந்தது. அதை இப்போது வாங்க பணம் இல்லை. அதனால் அப்பா வழக்கமான வேலை முடிந்தபிறகு பகுதிநேர வேலையில் சேர்ந்து உழைத்து உனக்கு ஒரு கைபேசியை வாங்க நினைக்கிறார்” என்று அம்மா விளக்கினார். ராமு மனம் வருந்தினான். அன்றுதான் அப்பாவின் அருமையைப் புரிந்து கொண்டான். அப்போதுதான் அப்பா தன் மீது வைத்திருந்த அன்பு அளவு கடந்தது என்பதை அவன் உணர்ந்தான். கைபேசியை விட தன் பெற்றோரே தன் மகிழ்ச்சி என்பதை உணர்ந்தான். அந்த கைபேசி வேண்டாம் என்று அவன் முடிவு செய்தான்.
கருத்துகள்
முதல் கருத்தை நீங்கள் பதியுங்கள்!