கவிநயன் சரவணன் (North View primary school)
""தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னே..!”"
"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னே..!தாலாட்டுப்பாட்டும் தாயின் அன்பும் தந்தையின் அன்பின் பின்னே.!”
என்னும் இந்த பாடல் வரிகளைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு என் அப்பா எனக்காக செய்த தியாகங்கள் தான் நினைவிற்கு வரும். இப்படித்தான் ஒரு நாள் என் நெருங்கிய நண்பன் குகன் விளையாட்டுப் பூங்காவுக்கு புதிய திறன் பேசி ஒன்றை எடுத்து வந்தான். இது நாள் வரை நான் அப்படி ஒரு விலை உயர்ந்த கைபேசியைப் பார்த்ததே இல்லை. குகன் அவனின் திறன் பேசியின் சிறப்பு அம்சங்களைக் கூறினான். மேலும் இணைய விளையாட்டுகளை விளையாட எனக்கு அனுமதி கொடுத்தான். பத்து நிமிடங்களுக்கு நான் என்னை மறந்து விளையாடினேன். வீட்டுக்குப் புறப்பட நேரம் வந்தது. அவன் என் கையிலிருந்து கைபேசியை வாங்கினான். அந்த நேரத்தில் என் மனம் நொறுங்கியது. கனத்த இதயத்துடன் நான் வீட்டிற்குக் கிளம்பினேன். எப்படியாவது அப்பாவிடம் பேசி ஒரு புதிய கைபேசியை வாங்கிவிட வேண்டும் எனத் தீர்மானித்தேன். அதேபோன்று அப்பாவும் வேலை முடிந்து வரவேற்பு அறையில் அமர்ந்திருந்தார். ஓடிச் சென்று அப்பாவைக்கட்டி அணைத்து செய்தி ஒன்றைக் கூற வேண்டும் என கூறினேன். அப்பாவும் என்ன செய்தி என்று கேட்டார். அப்பா. உங்களிடம் ஒரு கைபேசி உள்ளது. அதைப்போன்று அம்மாவிடமும் உள்ளது. என்னிடமும் ஒரு கைபேசி இருந்தால் எப்படி இருக்கும்.? என்று கேட்டேன். உடனே அம்மா “பிடி போடாமல்” எங்களிடம் என்ன வேண்டும் என்று சொல் என்று கூறினார். அதற்கு நான் எனக்கு ஒரு கைபேசி ஒன்றை வாங்கிக் கொடுக்கிறீர்களா என்று பரிதாப முகத்தோடு கேட்டேன். உடனே என் அம்மா மறுத்தார். அப்பாவும் ஒன்றும் கூறாமல் தன்னறைக்குள் சென்றார். நானும் கவலையாக எனது அறைக்குள் சென்றேன்.
மறுநாள் வழக்கம் போல் நான் பள்ளிக்குத் தயாரானேன். அப்பாவும் வேலைக்கு கிளம்பினார். நான் கைபேசியைக் கேட்டதும் அப்பாவிடமிருந்து எந்த பதிலும் வராதது எனக்கு மிகுந்த மன வேதனையைத் தந்தது. இருவருமே மௌனமாக வீட்டிலிருந்து புறப்பட்டோம். அப்பாவை எப்படியாவது சமாளித்து கைபேசியை வாங்க வேண்டும் என்று எண்ணினேன். வேலை முடிந்து அப்பா வீடு திரும்பியதும் மீண்டும் கைபேசி வாங்குவதைப் பற்றி பேச வேண்டும் என யோசித்தேன். அதனால் வழக்கம் போல் அப்பாவின் வருகைக்காக காத்திருந்தேன். ஆனால் அப்பா வரவில்லை. ஏதோ வேலை அலுவல்தான் அப்பாவின் தாமதத்திற்கு காரணம் என்று எண்ணி அம்மாவிடம் கேட்டேன். ஆனால் அம்மாவின் பதில் எனக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. எனக்கு கைபேசி வாங்கி தர வேண்டும் என்பதால் அப்பா வழக்கமான வேலை முடிந்து பகுதி நேர வேலைக்குச் செல்வதாகக் கூறினார். அச்செய்தியைக் கேட்டதும் என்னால் அழுகையைத் தாங்க முடியாமல் என் கண்களிலிருந்து கண்ணீர் மழை போல் கொட்டியது. அப்பாவை அப்பொழுதே பார்க்க வேண்டும் என என் மனம் ஏங்கியது. ஆனால் அப்பா வீடு திரும்ப தாமதமாகும் என்று அம்மா கூறினார். மனகனத்துடன் படுக்கைக்குச் சென்றேன். மறுநாள் காலை அப்பா என் படுக்கையறைக்கு வந்தார். அப்பாவின் தியாகத்திற்கு முன் அந்த புதிய கைபேசி எனக்கு மிகச் சிறிய பொருளாகவே தென்பட்டது. அப்பாவைக் கட்டியணைத்து முத்தமிட்டேன். அப்பா என் கரங்களைப் பிடித்து,” கவின் இதோ நீ கேட்ட கைப்பேசி என்று என்னிடம் தந்தார். எனக்கோ அந்த கைபேசியைத் தொட சிறிதும் மனமில்லை. “அப்பா முதலில் என்னை மன்னியுங்கள். நமது குடும்பத்தின் சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாமல் கைபேசியை நான் கேட்டிருக்கவே கூடாது. அம்மா கூறியது போல் எனக்கு கைப்பேசி பயன்படுத்துவதற்கான அவசியம் எதுவும் இல்லை. அம்மாவின் கைப்பேசி பழுதாகி இருப்பதால் இந்த புதிய கைபேசியை அம்மாவிடம் கொடுங்கள் அப்பா” என்றேன். இதைக் கேட்ட அப்பா என் தலையைத்தடவிக்கொடுத்து, முதுகை அன்பாகத் தட்டினார். இனிமேல் என் அப்பா பெருமைப்படும் படி தான் நடந்து கொள்வேன் என்று உறுதியளித்தேன். “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்” என்னும் திருவள்ளுவரின் வாசகம் என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்தது. என்னைப் பிள்ளையாக பெற்றதற்கு என் தந்தை பெற்ற பேறு என்ன என்று எல்லோரும் என்னைப் புகழும்படி நடந்து கொள்வது தான், நான் என் தந்தைக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய கைம்மாறு.
கருத்துகள்
முதல் கருத்தை நீங்கள் பதியுங்கள்!