பவ்யா (Cedar primary school)
"“எனக்கு கைத்தொலைபேசி தேவையே இல்லை” என்று கூறி தந்தையின் காலில் விழுந்து கண்ணீர் சிந்தினான். "
பள்ளி மணி கணீரென்று ஒலித்தது. மாணவர்கள் எல்லோரும் கூண்டிலிருந்து விடுபட்ட பறவைகளைப் போல் பள்ளியை விட்டு சிட்டாய் பறந்தனர். ரவியும் பாலாவும் சேர்ந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது ரவி பாலாவிடம் பார் பாலா, எனது பெற்றோர் எனக்கு புதிய கைபேசியை வாங்கித் தந்திருக்கிறார்கள் என்று புன்னகை பூத்த முகத்துடன் கூறினான். பாலா வாடிய முகத்துடன் “ஓ மிக்க மகிழ்ச்சி! “என்று கூறி விடைபெற்றான். அம்மாவும் அப்பாவும் எனக்கு புதிய கைத்தொலைபேசியை வாங்கித் தந்ததில்லையே என்று வருத்தத்துடனும் ஏக்கத்துடனும் எண்ணியவாறே வீட்டை நோக்கி நடைபோட்டான்.
அவனது அப்பா வேலையிலிருந்து வீடு திரும்பியதும் பாலா அவனது பெற்றோரிடம், “அம்மா ,அப்பா எனக்கு ஒரு புதிய கைத்தொலைபேசியை வாங்கித் தர முடியுமா? எனக்கு கைப்பேசி ஒன்றை வைத்திருக்க நீண்ட நாள் ஆசை” என்று பணிவுடன் கேட்டான். முடியாது ..அது மிகவும் விலை உயர்ந்தது..தற்போது கைத்தொலைபேசி உனக்கு தேவை இல்லை. தேவைப்படும்போது நாங்களே உனக்கு வாங்கித் தருவோம் என்று அவனது தாயார் மறுத்தார். அதைக் கேட்ட பாலா “ஓ “என்று அழுதான். அவன் தன்னறைக்கு ஓடி கதவை சத்தமாக மூடினான். அவ்வளவு நேரமாக நடந்ததை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த பாலாவின் தந்தை அவரது மனைவியிடம் ,பரவாயில்லை நாம் பாலாவுக்கு ஒரு புதிய கைபேசியை வாங்கிக் கொடுத்தரலாமே என்று கூறினார். ஆனால் அது மிகவும் விலை உயர்ந்தது என்றும் பாலாவின் அம்மா பதிலளித்தார். பரவாயில்லை வாங்கிக்கொடுப்போம் என்று பாலாவின் தந்தை முடிவெடுத்தார். பாலாவின் தாயார் வேறு வழியின்றி அதற்குச்சம்மதித்தார்.
சில நாட்களுக்குப் பிறகு பாலாவின் தந்தை வழக்கத்திற்கு மாறாக அவ்வளவு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. அப்பா எங்கே என்று பாலா கவலையுடன் யோசித்தான். அவன் உடனே தாயாரிடம் ஓடிச் சென்று, அம்மா… அப்பா எங்கே? என்று வினவினான். அம்மா ,மகனே …!மாலை நேரம் உன் தந்தை பகுதி நேர வேலை புரிகிறார். உனக்கு ஒரு கைத்தொலைபேசியை வாங்கித் தர வேண்டும் என்று அவர் உறுதியுடன் இருக்கிறார். அதற்காக பணம் ஈட்ட அவர் ஓர் உணவகத்தில் ஒரு சேவகராக பணிபுரிகிறார். அவர் வாடிக்கையாளர்களுக்கு உணவைப் பரிமாறுவதோடு மேசைகளை சுத்தம் செய்கிறார். இதுவே உன் அப்பாவின் உழைப்பு..! என்று பாலாவிடம் விளக்கினார்.உடனே குற்ற உணர்வு பாலாவை வாட்டியது. நான் தேவை இல்லாமல் அப்பாவிடம் கைத்தொலை பேசி வாங்கித் தருமாறு கேட்டு அப்பாவை சிரமப்பட வைத்தேனே என்று பாலா மனம் வருந்தினான். அவன் எப்படியாவது தந்தையிடம் மன்னிப்பு கேட்டே தீர வேண்டும் என்று எண்ணினான். பாலா தன் தந்தை வேலையில் இருந்து வீடு வரும் வரை காத்திருந்தான். அப்பாவைப் பார்த்ததும் அவன், “என்னை மன்னித்து விடுங்கள் அப்பா நான் தேவையில்லாமல் உங்களை கைத்தொலைபேசி வாங்கித் தருமாறு கேட்டுவிட்டேன்.. எனக்கு கைத்தொலைபேசி தேவையே இல்லை” என்று கூறி அவரது காலில் விழுந்து கண்ணீர் சிந்தினான். பாலாவின் அப்பா அதைக்கண்டு மனம் நெகிழ்ந்தார். “பரவாயில்லை மகனே”என்று கூறியவாறே அவர் பாலாவை அணைத்தார்.நன்றி அப்பா ..என்று நன்றி உணர்வு பொங்க பாலா கூறினான்.அப்போதுதான் அவன் தன் தந்தை அவனுக்காக செய்யும் தியாகங்களை உணர்ந்தான். தனக்கு இப்படி ஒரு தந்தை கிடைத்திருப்பதை எண்ணி பெருமைப்பட்டான். இனி அவன் தன் தந்தையை நேசித்து அவரைப் போற்றி புகழ உறுதி பூண்டான்.
கருத்துகள்
முதல் கருத்தை நீங்கள் பதியுங்கள்!