தொடக்க நிலை

ஆரியன் பழனியப்பன் முத்தையா (Alexandra Primary School)

"என்னைப் பெற்றெடுக்க நீங்கள் என்ன தவம் செய்தீர்களோ என்று மற்றவர்களைக் கேட்க வைப்பேன்!"

ராமு.. இதோ பார்.!. என் புதிய கைத்தொலைபேசி. சமீபத்தில் நடந்த கணித ஒலிம்பியாட்டில் நான் நல்ல மதிப்பெண்களைப் பெற்றேன் அல்லவா? அதைப் பாராட்டி என் தந்தை எனக்காக இந்த கையடக்கத் தொலைபேசியை வாங்கிக் கொடுத்தார் என்று மாறன் ராமுவின் கவனத்தை ஈர்த்தான். புன்னகை தவழும் முகத்துடன் மாறன் அதன் சுவாரஸ்யமான அம்சங்களைச் சுட்டிக் காட்டினான். அந்த கைத்தொலைபேசியின் திரை மிகவும் பெரியதாக இருந்தது. அதனால் அதில் புத்தகங்களையோ, செய்தித்தாள்களையோ அல்லது மற்ற தகவல்களையோ எளிதாகப் படிக்கலாம் என்று உணர்ந்த ராமு ஒரு கணம் பிரமித்துப்போனான். அதில் பல விளையாட்டுகளையும் விளையாடலாம். அது மட்டுமல்லாமல் அதன் மின்கலம் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்று மாறன் விளக்கினான். அப்படிப்பட்ட ஒரு கைப்பேசி கிடைத்ததால் மாறன் மட்டற்ற மகிழ்ச்சியில் இருந்தான்.

ரீங் ரீங்… என்று வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கும் பள்ளி இறுதி மணி ஒலித்தது. உடனே மாறன் அந்த கைத்தொலையை மூன்றாக மடித்து அவனுடைய சட்டைப்பைக்குள் வைத்துக்கொண்டு சிறகடித்துப் பறந்தான். அதைப் பார்த்த ராமு ஆச்சரியத்தில் வாயைப் பிளந்து நின்றான். அக்கைபேசியின் அருமை பெருமைகளைத் தெரிந்து கொண்ட ராமுவோ அதை வாங்கியே தீர வேண்டும் என்ற நோக்கத்தோடு அவனது வீட்டை நோக்கி மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்தான். வீட்டை அடைந்த ராமு முதல் வேலையாக தனது பெற்றோரின் கவனத்தை ஈர்த்தான். “என் நண்பன் மாறன் தன் பெற்றோரிடமிருந்து சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு புத்தம் புதிய கைபேசியை பெற்றிருக்கிறான். அந்த மடிக்கக்கூடிய கைபேசியின் மின்கலம் நீண்ட காலத்திற்கு நீடிக்கக்கூடியது அதனால் நான் அதைப் பயன்படுத்தி எளிதாக படிக்கவும் விளையாடவும் முடியும். அதை நீங்கள் எனக்கு வாங்கித் தருகிறீர்களா?”என்று ராமு தனது பெற்றோரிடம் கேட்டான்.

அவனது உற்சாகத்தைக் கண்டு அவனது பெற்றோர் இருவரும் சோகமாக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு ராமுவின் தாயார், நீ சொல்வதைப் பார்த்தால் அது விலை உயர்ந்த கைபேசியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் ராமு. அதை வாங்க எங்களால் இயலாது. நம்மிடம் போதிய பணம் இருக்க வாய்ப்பு இல்லை என்று கனிவுடன் சொன்னார். அதற்கு உடனே ராமுவும், மாறன் கணித ஒலிம்பியாட்டில் சிறப்புத் தேர்ச்சி பெற்றான். அதற்கு அவனது தந்தை அவனுக்கு அந்த கைத்தொலைபேசியை வாங்கிக் கொடுத்திருக்கிறார். நான் அவனை விட அதிகமாகவே மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறேன். அதனால் நீங்கள் ஏன் எனக்காக அதே போல் ஒரு கைபேசியை வாங்கிக் கொடுக்கக் கூடாது என்று கேட்டான். ராமுவின் தாயாரோ, “நீ சொல்வது சரிதான் ராமு. ஆனால் இப்போது நம்மிடம் உன் படிப்பு செலவுக்கும் , வீட்டுச் செலவுக்கும் தேவையான பணமே உள்ளது. நீ படித்த கொன்றை வேந்தனில்அவ்வையார் சொன்ன “தேடாது அழகின் பாடாய் முடியும்” என்பதற்கு ஏற்ப நாம் இப்போது தேவையில்லாமல் செலவு செய்தால் அது துன்பத்தில் தான் முடியும்” என்று எடுத்துரைத்தார். அதைக் கேட்ட ராமுவின் முகம் காற்று போன பலூன் போல் வாடியது. அவன் கண்களிலிருந்து கண்ணீர் தாரைதாரையாக வழிந்தோடியது. நான் அவனை விட சிறப்பாக செய்தேனே என்று திரும்பத் திரும்ப ராமு கூறிக்கொண்டே அழுது கொண்டிருந்தான். அதைப் பார்த்த அவனது தாயாருக்கு கோபம் வந்தது. அவர் எண்ணெயில் போட்ட கடுகைப் போல் திட்டவட்டமாக கைத்தொலைபேசியை வாங்கிக் கொடுக்க முடியாது என்று கூறி அவனை அவனது அறைக்குச் செல்லச் சொன்னார். ராமு உலகமே இருண்டு விட்டது என்று எண்ணி சிறகொடிந்த பறவையாக அவனது அறைக்கு ஊர்ந்து சென்றான்.

மறுநாள் ராமு பள்ளி மேடையில் கணித ஒலிம்பியாட்டில் சிறப்புத் தேர்ச்சிக்கான வெற்றிக் கோப்பையை தலைமை ஆசிரியரிடமிருந்து பெற்றான். அன்று மாலை அதை தந்தையிடம் காட்ட ஆவலோடு அவர் வரவிற்காக காத்திருந்தான். அவர் விரைவில் வந்துவிடுவார் என்று என்றெண்ணி பத்து மணி வரை காத்திருந்தான். தந்தை பொதுவாக ஆறு மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்து விடுவாரே. இப்போது பத்து மணி ஆயிற்றே..! ஏன் இன்னும் அவரைக் காணவில்லை என்று ராமு குழம்பினான். அப்பா எங்கே? என்று ராமு தாயாரிடம் கேட்டான். “நேற்று நீ அடம் பிடித்து அழுவதைக் கண்டு உன் அப்பா அந்தக் கைத்தொலைபேசியை வாங்கிக் கொடுக்க முடிவு எடுத்துள்ளார். அதற்காக அவர் இன்றிலிருந்து இரவில் பகுதிநேர வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார். அதனால் அவர் இப்போது உணவகத்தில் பணியாளராக வேலை செய்கிறார். அவர் மேசைகளைத் துடைத்து, பிறருக்கு உணவை பரிமாறுகிறார் என்று அவன் அன்னை கூறினார். அதைக் கேட்ட ராமு ஒருகணம் சிலையாய் நின்றான். கைத்தொலைபேசியைப் பற்றி மறந்துவிட்டு அவன் மனம் வருந்தினான்.

மறுநாள் பள்ளி இல்லாததால் ராமு அப்பாவுக்காக நடு இரவு வரை காத்திருந்தான். அவர் திரும்பி வந்தவுடன் ராமு அவரைக் கட்டி அணைத்து,”எனக்கு கைபேசி வேண்டாம் அப்பா அதற்கு பதிலாக நான் உங்களுடன் நேரத்தைக் கழிக்கவே விரும்புகிறேன். நீங்கள் பகுதிநேர வேலைக்கெல்லாம் செல்ல வேண்டாம் என்று கூறினான். “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்”

என்ற குறளுக்கு ஏற்ப நான் கைபேசி இல்லாமலேயே இருப்பவற்றை வைத்துக்கொண்டு நன்றாக படித்து நல்ல பெயர் பெற்று, என்னைப் பெற்றெடுக்க நீங்கள் என்ன தவம் செய்தீர்களோ என்று மற்றவர்களைக் கேட்க வைப்பேன் என்று ராமு கூறினான். அதைக் கேட்ட அவன் பெற்றோர் அவனை பெருமிதத்தோடு பார்த்தார்கள்.

கருத்துகள்

0/500

முதல் கருத்தை நீங்கள் பதியுங்கள்!