உயர் நிலை

ஏஞ்ஜலா (Bowen Secondary School)

"அப்பா..அப்பா..!"

இந்த உலகில் நம் வாழ்வின் அடித்தளமாக இருப்பவர் பெற்றோர்களே! அவர்களில் தந்தை என்பவர் குடும்பத்தின் தூணாக இருந்து தனது உழைப்பால் பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் எதிர்காலத்தைத் திட்டமிட்டு உருவாக்குகின்றார்.அதை நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொண்டாலே போதும் பெற்றோருக்கு அதுவே பேரானந்தமாக இருக்கும்.

என் பிறந்தநாளுக்கு இன்னும் பத்து நாட்களே இருக்கின்றன என்று மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்தேன். ஏனென்றால் என் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து உணவு விருந்துடன் என் பிறந்தநாள் விழாவை கொண்டாடப் போகிறேன் என்று கனவுக் கோட்டை கட்டியிருந்தேன். எப்படி ஆடை உடுத்துவது என்று பலவாறு கற்பனை செய்தேன். “அம்மா பாருங்கள்… இந்த ஆடை நன்றாக இருக்கிறது அல்லவா?” என்று கைபேசியை காட்டினேன். என் அம்மாவின் கண்கள் அகல விரிந்தன. “நிலா…இந்த உடை அதிக விலையாக இருக்கும் போல தெரிகிறதே..” என்று கூறினார். ஆமாம் அம்மா ஆனால் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது நான் என் பிறந்தநாளுக்கு இதை வாங்கிக் கொள்ளட்டுமா என்று ஆசையுடன் கேட்டேன்.. முடியாது நிலா குறைந்த விலையில் ஆடை வாங்கினால் போதும் ,மேலும் உன் நண்பர்களை வீட்டிற்கு அழைக்க வேண்டாம் இந்த முறை எளிதாக உன் பிறந்தநாளை கொண்டாடலாம் என்றார். அதிர்ச்சியில் சிலையானேன். என் கனவுக்கோட்டை உடைந்து போனது. கண்ணீர் அருவி போல் கொட்டியது. ஏன் அம்மா என் நண்பர்களை அழைக்கக்கூடாது? என்று கேட்டேன் அதற்கு நிறைய செலவாகும். நமது குடும்ப சூழ்நிலை இப்போது சரியில்லை என்று கூறினார். என் முகம் வாடியது. நான் அழுது கொண்டே என்னறைக்குச் சென்றேன். என் அப்பாவிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு நடந்ததை கூறி அழுதேன். அம்மா மீது உள்ள கோபத்தை அவரிடம் காட்டினேன். நான் என் நண்பர்களிடம் கூறிவிட்டேன். இனிமேல் அவர்களிடம் என் பிறந்த நாள் விழா நடக்காது என்று கூறினால் எனக்கு அவமானம்தானே! என்னைப்பற்றி உங்களுக்கு என்ன கவலை. நான் அவமானப்பட்டால் உங்களுக்கு என்ன? என் ஆசை நிறைவேறாவிட்டாலும் அது பற்றி உங்களுக்கு என்ன? என்று சத்தமாக அழுதேன். நிலா,… நீ ஒன்றும் கவலைப்படாதே உன் பிறந்தநாள் விழா நீ விரும்பிய படியே நடக்கும் என்று கூறினார். சுற்றிக்கொண்டிருந்த உலகம் இப்போது நிலையாக நின்றது. பதறிய மனம் இப்போது தெளிவானது. என் அப்பா என் மீது பாசமாக இருக்கிறார் என்று ஆனந்தத்தில் மிதந்தேன்.

ஆனால் அன்று இரவு என் பெற்றோர் உரையாடுவதைக் கேட்டேன். என் அம்மா அப்பாவிடம் கவலையாக பேசினார். “நீங்கள் மிகவும் கஷ்டப்படுகிறீர்கள்.. கூடுதலாக வேலை பார்க்கிறீர்கள்..நிறைய செலவுகள் இருக்கின்றன. இந்த நிலையில் பிறந்த நாள் விழா அவசியமா.? அந்த செலவையும் சமாளிக்க முடியுமா..?நீங்கள் அவளுக்கு செல்லம் கொடுக்காதீர்கள் என்று கூறினார். ஆனால் என் அப்பா நம் பிள்ளையின் ஆசையை நிறைவேற்றி வைப்பது நம் கடமை. செலவு பற்றி எல்லாம் யோசிக்காதே. நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினார். அதைக் கேட்டதும் என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. இது நாள் வரை என் குடும்பத்தின் நிலை பற்றி நான் யோசித்ததே இல்லை. என் ஆசை என் கனவு என் நண்பர்கள் என்று சுய நலமாக இருந்ததை எண்ணி வேதனைப்பட்டேனே. என் அப்பா எந்த கஷ்டத்தையும் என்னிடம் தெரியப்படுத்தியதே இல்லை. அப்பாவின் தியாகத்தை அப்போதுதான் உணர்ந்தேன். என் அப்பாவே மறுத்தாலும் “என் பிறந்தநாள் விழா வேண்டாம்” என்று சொல்ல வேண்டும் என்ற தீர்மானத்தோடு அவரை நோக்கிச் சென்றேன்.

கருத்துகள்

0/500

முதல் கருத்தை நீங்கள் பதியுங்கள்!